கணவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னுவாரன்கோட்டை அம்பேத்கர் நகரில் செல்லப்பாண்டி(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூழலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சுலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது செல்லபாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் செல்லப்பாண்டி அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அஞ்சு லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் செல்லபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.