முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கூலி தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விசுவாசம் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தர்மராஜ் மொட்டணம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது விசுவாசம் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தர்மராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து விசுவாசம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மராஜை சரமாரியாக குத்திவிட்டு தனது நண்பருடன் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தர்மராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தர்மராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசுவாசம் மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.