கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்துசென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் மாங்கரை பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடைக்கு செல்வதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கிரேன் முதியவரின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.