வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரனையில் வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் வசித்து வந்த 25 வயதுடைய ஆனந்தன் என்ற அந்தோணி மற்றும் 22 வயதுடைய ஜெய்சூர்யா ஆகிய 2 பேரும் ஜாபரிடமிருந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது . இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.