அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் ரோட்டில் நடந்துகொண்டிருந்த 65 வயது பெண்மணியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் 65 வயதுடைய பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரின் எதிரில் ஒரு கருப்பினத்தவர் வந்து அந்த பெண்மணியை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். இச்சம்பவம் அருகில் இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
மேலும் அந்த நபர் மனிதாபிமானம் இல்லாமல் அந்தப் பெண்ணை ஓங்கி உதைத்ததில் அவர் தூரத்தில் சென்று கீழே விழுகிறார். அதன்பின்பும் விடாமல் தொடர்ந்து அப்பெண்மணியின் தலையில் மிதித்துக் கொண்டேயிருக்கிறார் அந்த நபர். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல் சாதாரணமாக நடந்து செல்கிறார் அந்த நபர்.
தற்போது அந்தப் பெண்மணி இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த அதே கடையில் செக்யூரிட்டிகள் இருவர் இக்கொடூர காட்சியைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.
மேலும் இருவரில் ஒருவர் மெதுவாக சென்று கதவை மூடிவிட்டு வந்துள்ளார். இந்த செக்யூரிட்டிகள் இருவருமே அந்த நபரை தடுக்கவோ, அந்த பெண்ணை காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.