மக்களவையில் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகுர் ஊடகங்களில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.168.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விளம்பரங்களுக்காக மத்திய அரசின் செலவினங்கள் பற்றி மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தாகுர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மத்திய அரசின் விளம்பரங்களுக்காக நடப்பு நிதி ஆண்டில் அச்சு ஊடகங்களில் ரூ.91.96 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
அதாவது அச்சு ஊடகங்களில் கடந்த 2014 -2015 ஆம் நிதியாண்டில் ரூ.424.84 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 2015 – 2016 -ஆம் நிதியாண்டில் ரூ.508.22 கோடியும், 2016-2017 ஆம் நிதியாண்டில் ரூ.468.53 கோடியும் 2017 – 2018 -ஆம் நிதியாண்டில் ரூ.636.09 கோடியும், 2018 – 2019 -ஆம் நிதி ஆண்டில் 429.55 கோடியும், 2019 – 2020 -ஆம் நிதியாண்டில் ரூ.295.05 கோடியும், 2020 – 2021 -ஆம் நிதியாண்டில் ரூ.179.04 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2014 – 2015 -ஆம் நிதியாண்டில் மின்னணு ஊடகங்களில் 473.67 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 2015- 2016 -ஆம் வருடங்களில் 531.60 கோடியும், 2016 -2017 -ஆம் நிதி ஆண்டில் 609.15 கோடியும், 2017 -2018 -ஆம் நிதியாண்டில் ரூ.468.92 கோடியும், 2018- 2019 -ஆம் நிதியாண்டில் ரூ.514.28 கோடியும், 2019 -2020 -ஆம் நிதியாண்டில் ரூ.317.11 கோடியும், 2020- 2021 -ஆம் நிதியாண்டில் ரூ.101.24 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.