உலகப் புகழ்பெற்ற சிவாலய விழா தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார். பின்னர் கோட்டாட்சியர் ரவி பேசியதாவது: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது. எனவே தற்போது நடராஜர் கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் நடத்திக்கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு சிவ பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.