வெறிநாய் கடித்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று காலை வெறிபிடித்து சுற்றி திரிந்த தெரு நாய் செட்டிகுளத்தைச் சேர்ந்த சுதாகர்(14), நிதிஷ்(13), ஆதித்யா(12), முருகேசன்(40), பிரித்திவிராஜ்(23) உள்ளிட்ட 5 பேரை கடித்து குதறியது.
இவர்கள் 5 பேரையும் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக 5 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.