காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிபட்டி ஊராட்சி சின்னகணக்கம்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் மின் விளக்குகளும் சரியாக எரியவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கல்லாவி-ஊத்தங்கரை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.