Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்”….. திரையுலகினர் அதிர்ச்சி….!!!!!

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்.

இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1952ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை பெற்றவராக விளங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல்வேறு படங்களையும் இயக்கியுள்ளார். 1978ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான பிரதாப் போத்தன் தமிழில் அழியாத கோலங்கள் படம் மூலம் அறிமுகமானார்.

தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம், வாழ்வே மாயம், சிந்து பைரவி, தேடினேன் வந்தது, படிக்காதவன், முரண், பூஜை, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 80ஸ், 90ஸ் காலக்கட்டங்களில் இளைஞர்களின் விருப்ப பாடலான ”என் இனிய பொன் நிலாவே” இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததாகும்.

மேலும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது, எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது – சிறப்பு ஜூரி விருது – உள்ளிட்டவற்றை பெற்ற பெருமையும் கொண்டவர். நடிகர் பிரதாப் போத்தன், 1985ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார். 1990ஆம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை மணந்தார். 2012ஆம் ஆண்டில் அவருடனும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |