நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அரசியலுக்கு மட்டுமல்ல தமிழகத்தை ஆளலாம் என மனக் கணக்குப் போட்ட நடிகர்களின் ஆசைக்கும் தான்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அவரது அரசியலுக்கு மட்டுமல்ல திரை கவர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டை ஆண்டுவிடலாம் என மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் மற்ற நடிகர்களின் ஆசைக்கும் தான். ஒருவேளை ரஜினி ஒரு சில தொகுதிகளை வென்று இருந்தால் கூட நடிகர்கள் அரசியலுக்கு வரும் கலாச்சாரம் தொடர்ந்து இருக்க வாய்ப்புள்ளது. சினிமா நடிகர்கள் உடனான உறவைத் திரையோடு முடித்துக்கொள்ள இனியாவது பழகிக்கொள்வோம்.