Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உதயா”…. கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியீடு….!!!!!

நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா.

பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது வருத்தத்துக்குரிய ஒன்று.

தன்னிலை விளக்க கடிதத்திற்கு பதில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டது. மேலும் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கின்றேன் எனவும் கூறினேன். இருந்த போதிலும் நான் இப்போது நீக்கப்பட்டு இருக்கின்றேன். என்னையும் சக நடிகரான பாபியையும் நீக்கியது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பாக்கியராஜை நீக்கியது தான் வருத்தம் அளிக்கிறது. சென்ற தேர்தலின் போது தலைவராக போட்டியிட்டதற்காக அவரை நீக்கியது பெரும் குற்றமாகும். இது ஒரு தவறான முன்னுதாரணம். சங்கத்திலிருந்து எங்களை நீக்கி இருப்பது தற்போது இருக்கும் நிர்வாகிகளின் பழிவாங்கும் எண்ணத்தையே வெளிக்காட்டுகின்றது.

பழிவாங்கும் எண்ணம் இப்போது இருக்கும் நிர்வாகிகள் ஆரம்பம் முதலில் இருந்து வருகின்றது. சென்ற முறை பதவியில் இருந்த போது எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் என கூறினோம். ஆனால் அதைக் கேட்காமல் நலிந்த நாடக கலைஞர்கள் உட்பட பலரை நீக்கி அவர்களது வருத்தத்தை சம்பாதித்துள்ளார்கள். எனக்கு இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்கும் தீர்வாகாது. எதுவாக இருந்தாலும் சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் 64 பேர் இதுவரை இறந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இறுதி சடங்கிற்கான பணம் கூட வழங்கவில்லை. சங்க கட்டிடப் பணிகளை முடிப்பது மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனின் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தற்போதைய ஒரு தேவையாக இருக்கின்றது. ஒரு உறுப்பினராக சங்க விதிகள் அனைத்தையும் அறிந்தவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிப்பதே என் கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |