நடிகர் சிவகுமார் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
40 வருடங்களாக திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும், நாடக மற்றும் சொற்பொழிவு மேடைகளிலும் பங்கேற்று உதாரண கலைஞராக திகழ்பவர் சிவகுமார். இன்று இவர் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகுமார் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். பிறந்த பத்தாவது மாதத்தில் சிவகுமார் தனது தந்தையை இழந்தார். இவர் கடந்த 1965-ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து 1967-ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படம் சிவகுமாருக்கு பேரையும், புகழையும் அளித்தது. இதன் பின் இவர் 1974-ஆம் ஆண்டு லட்சுமி என்பவரைத் திருமணம் செய்தார். சிவகுமாருக்கு சூர்யா, கார்த்தி என இரு மகன்களும், பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த மூவருமே தற்போது திரையுலகில் உள்ளார்கள். பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு பிறகு சிவகுமார் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சிவகுமார், ‘சினிமாவில் கூட பெரிய சம்பளம் கிடையாது. தொலைக்காட்சி சீரியல்களில் 10 நாட்களுக்கு நடித்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். அதன்பிறகு தான் புதிதாக கார் வாங்கினேன்’ என தெரிவித்தார். மேலும் 2005-ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவத்தால் இனிமேல் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார். இதன்பிறகு சிவகுமார் கம்பராமாயணம் குறித்த ஆய்வில் இறங்கினார். ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 8000 மாணவியர் முன்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக சிவகுமார் கம்பராமாயணம் பற்றி பேசி பாராட்டுக்கள் பெற்றார். மேலும் சிவகுமாரும், அவருடைய குடும்பத்தினரும் 42 வருடங்களாக மாணவர்களுக்கு கல்வி உதவி அளித்து வருகின்றனர். +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு அளித்து வருகின்றனர் . கடந்த வருடம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவக்குமார், ‘அறக்கட்டளையை தொடங்கியபோது ஒரு படத்துக்கு எனக்கு ரூ.25000 சம்பளம். அந்த வருடம் +2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ.1000, இரண்டாவது மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ.750, மூன்றாவது மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ரூ.500 என தொடங்கினேன். இதன்பின் 25-ஆம் ஆண்டில் முதல் பரிசாக ரூ.50,000 வரை கொடுத்தேன்’ என தெரிவித்திருந்தார்.