நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள குருப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர இவர் மலையாளத்தில் சல்யூட், குருப், இந்தியில் சுப்-ரிவஞ் ஆப் தி ஆர்டிஸ்ட், தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள குருப் படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டொவினோ தாமஸ், சுரபி லட்சுமி, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேபெரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுசின் சியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில் குருப் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.