நடிகர் ரஜினிகாந்த் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவமனை கடுமையாக எச்சரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார்.
இதனை அடுத்து நேற்று முன்தினம் ரஜினி திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் பல தரப்பினரும் ரஜினியை நலம் விசாரித்தும், வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை தேறி உள்ளதால் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மன அழுத்தம் இல்லாத, இலகுவான பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரம் கண்டிப்பாக ஓய்வு அவசியம் என்றும், கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளது.