நடிகர் விஜயை வைத்து இயக்க தன்னிடம் ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தப் படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படம் என்னவென்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து அவரது மகன் சஞ்சய் திரைப் படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகியது. கனடாவில் இயக்குனருக்கான படிப்பை முடித்துள்ள சஞ்சய், விஜய்யிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், இது குறித்து விஜய் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சஞ்சய் சில குறும்படங்களை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜயை வைத்து இயக்க தன்னிடம் ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். தன்னிடம் இருக்கும் கதை வழக்கமான சினிமாவாக இல்லாமல் மியூசிக்கல் லவ் ஸ்டோரி என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டே விஜயை அணுகினால் நிச்சயம் பலனளிக்கும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.