நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர்.
இதனை விமர்சித்தே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்களுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழும் அடியை பார்த்து நடிகர்கள் எவரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் சீமானால் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இடத்தில் தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் விஜய் ரசிகர்கள் சுயேச்சையாக நின்று 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளனர். இது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.