அண்ணன் தங்கை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியம் லே-அவுட் 2-வது தெருவில் பிரமிளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமல் என்ற கணவர் உள்ளார். இவர் நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கமல் பிற பிரமிளாவை விட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணனான சுசீந்திரன் என்பவருடன் பிரமிளா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுசீந்திரனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சுசீந்திரனும், பிரமிளாவும் தனித்தனி அறையில் தூக்கில் அழுகிய நிலையில் சடலமாக தொங்கியதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரமிளா எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் வறுமை மற்றும் உடல் நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று வீட்டின் உரிமையாளருக்கு வாடகை பணத்தை கொடுத்து விடுங்கள் என எழுதியிருந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.