சீரியல் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா ஆண்களுடன் நடிப்பதை விரும்பாத ஹேம்நாத், அவரை நடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சந்தேக கண்ணோட்டத்துடன் அடிக்கடி சித்தியுடன் சண்டை இட்டுள்ளார். அதனால் சித்ரா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் ஹேம்நாத்திடம் இருந்து திருமணத்திற்கு எந்த உதவியும் கிடைக்காததால், சித்ரா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.