மத மாற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரபல மந்திரி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலைக்கு பின்னால் மத மாற்ற முயற்சி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவருடன் நடித்து வந்த ஷீசன் கான் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் துனிஷா சர்மா ஷீசன் கானை காதலித்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததால் மனம் உடைந்த துனிஷா சர்மா தற்கொலை செய்தது விசாரணைகள் தெரியவந்தது.
இந்நிலையில் இதுக்கு பின்னாலும் மதமாற்ற முயற்சி இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான கிரிஷ் மகாஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “நடிகை துனிஷா சர்மாவின் மரணம் லவ் ஜிகாத் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் நமது நாட்டில் நாளுக்கு நாள் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என கூறினார். இதனை பார்த்த காங்கிரஸ் தலைவர் நானா படோலே இந்த வழக்கை பா.ஜனதா தேவையின்றி மதமாற்ற கோணத்தில் கொண்டு போவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியதாவது, ” நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் முக்கியமான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற வழக்குகளை லவ் ஜிகாத் கோணத்தில் அணுகுகிறது. எனவே போலீசார் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.