பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம் இயக்குனர் ஆதித்யா தாரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் நடிகை யாமி கௌதம் கௌரவம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் விக்கி டோனார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை யாமி கதாநாயகியாக மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘யூரி தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ படத்தில் யாமி பல்லவி சர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை யாமி கௌதமுக்கும் ஆதித்யா தாருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். தற்போது யாமி கௌதம் தனது திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.