வாலிபர் மதுபோதையில் சைக்கிளை சாலையின் நடுவே போட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் மதுபான கடையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் மது குடித்துள்ளார். இந்த வாலிபர் மது குடித்த பிறகு பேருந்து நிலையம் அருகே ஏ.எம்.சி சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் போதையில் சைக்கிளை ஓட்ட முடியாமல் திணறிய அந்த வாலிபர் நடுரோட்டில் சைக்கிளை சாய்த்து போட்டு விட்டு அதன் மீது அமர்ந்துள்ளார். மேலும் அந்த வழியாக செல்பவர்களை வாலிபர் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையின் ஓரமாக வந்து அமருமாறு சிலர் கூறியுள்ளனர். அவர்களையும் அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டி நான் இங்கதான் இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சைக்கிளுடன் சேர்த்து தரதரவென இழுத்து சாலையோரம் வைத்தனர். அதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.