நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை 3-வது தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் காரை சாலை ஓரமாக நிறுத்தினார்.
அதன்பிறகு மூன்று பேரும் காரில் இருந்து வேகமாக இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.