மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அமைச்சரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோலிஹ் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த நபர் தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு அமைச்சரை 4 முறை குத்த முயற்சி செய்தார். அவரது குறி முழுவதும் அமைச்சரின் கழுத்திலேயே இருந்தது. சுதாரித்து கொண்ட அமைச்சர் சோலி, உடனடியாக தனது கைகளை கொண்டு தாக்குதலை தடுக்க முயன்றதால் அவரது கையில் கத்திக்குத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்கூட்டரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டார் அமைச்சர். தாக்குதல் நடத்தியவர் பின்னர் கைது செய்யப்பட்டார். ஹுல்ஹுமாலேயில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் சோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடுரோட்டில் அமைச்சர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மாலத்தீவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.