Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானத்தில்…. அடிதடி சண்டை…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகளை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரிலிருந்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகருக்கு கடந்த ஜூலை மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தை 2 விமானிகள் இயக்கியுள்ளனர். இந்த விமானம் ஜெனிவாலிருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் விமானி அறையிலிருந்து அடிதடி சண்டை சத்தம் கேட்பதை விமான பணியாளர்கள் அறிந்துள்ளனர். உடனடியாக, விமானி அறையை திறந்து ஊழியர்கள் உள்ளே சென்ற போது அங்கு விமான கேப்டனும் சக விமானியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அடிதடியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் சமாதான படுத்திய விமான ஊழியர்கள் விமானத்தை பிரச்சினையின்றி இயக்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து விமான கேப்டனும், சக விமானியும் விமானத்தை பிரச்சினையின்றி இயக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வராமல் இருக்க விமான பணியாளர் ஒருவர் விமானி அறையிலேயே இருந்தார். பின்னர், பெரும் பரபரப்பிற்கு பிறகு விமானம் பத்திரமாக பாரிசில் தரையிறங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம் விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையில் விமானிகள் சண்டையிட்டது உறுதியானதை தொடர்ந்து 2 விமானிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடுவானில் விமானத்தில் விமானிகள் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |