தெலுங்கானாவில் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நடை பாதையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் மதப்பூர் என்ற நகரில் உள்ள 100 அடி சாலையில் நேற்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் அருகே அமைந்துள்ள நடைபாதையில் சிலர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் ஜுப்ளி கில்ஸ் என்ற பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி நடைபாதையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அந்தக் கொடூர விபத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த 50 வயதுடைய பாபு என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய அந்த கார் அதிவேகத்தில் சாலையின் நடுவே திரும்பிய கோணத்தில் நின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சொகுசு காரின் ஓட்டுனர் கைது செய்துள்ளனர். ஆனால் அந்த கொடூர விபத்தை நவீன் குமார் என்ற நபர் ஏற்படுத்தியதாகவும், அவரை போலீசார் கைது செய்யவில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.