எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆவடி ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் சென்று கொண்டிருந்த போது ரயில் மெதுவாக சென்றது.
அப்போது சத்யராஜ் ரயிலில் இருந்து நடைமேடையில் இறங்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே தவறி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த ஆவடி ரயில்வே போலீஸ் சத்யராஜின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.