சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பாண்டி நகர் பகுதியில் கார் ஓட்டுநரான அபிஷேக் மாறன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் அபிஷேக் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டில் மொட்டை மாடியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அபிஷேக் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அதாவது நண்பரான பிரபாகரன் என்பவரது மனைவியுடன் அபிஷேக்கிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபிஷேக் அடிக்கடி செல்போனில் பிரபாகரனின் மனைவியை தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த பிரபாகரன் தனது நண்பரான அருள்குமார் என்பவரோடு இணைந்து அபிஷேக்கை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அருள் குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருக்கும் தலா 12,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.