தண்ணீரில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நைனாபுதூரில் ஓட்டுனரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தார். இதனை சுரேஷின் அண்ணன் கணேஷ் தெங்கம்புதூர் பகுதியில் வைத்து பார்த்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சுரேஷ் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது சிங்களேயர்புரி பால்குளம் படித்துறையில் வைத்து சுரேஷ் மது அருந்தியதாகவும், தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது படித்துறை அருகில் வேட்டி, செருப்பு ஆகியவை இருந்தது. இதனால் சுரேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரேஷின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.