மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கட்டிட என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது வேகமாக சென்ற அரசு பேருந்து கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.