கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர் உப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.