சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த இளம்பெண் பின்னால் வந்த காரில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பேருந்து பயணிகள் கொரோனா விழிப்புணர்வு எண்ணை அழைத்து தெரிவித்ததையடுத்து, குறிப்பிட்ட பேருந்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
காவல்துறையினருக்கும் இதுகுறித்த தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, பேருந்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பெண்ணை கண்டறிந்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது பேருந்து நிறுத்த நண்பர்களிடம் சவால் விடுத்து விளையாட்டாக செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.