தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் மெயின் ரோடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களான நாகராஜ், அஜித், ராஜி, ஷெரிப், ரமேஷ் ஆகியோருடன் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கார்த்திகேயன் மற்றும் நாகராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.