நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் நிதின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பர்களுடன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிதின் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கும், குழித்துறை தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நிதினை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் 2 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தீயணைப்பு வீரர்கள் நிதின் குழித்துறை ஆற்றங்கரையோரத்தில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் நிதினின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நிதினின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.