தண்ணீரில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி கலைஞர் காலனியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாயக்கன் பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் மஞ்சினி செல்லும் வழியில் இருக்கும் துளுக்கனூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
இதனை அடுத்து குளித்துக்கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கார்த்திகேயன் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கார்த்திகேயனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கார்த்திகேயனின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.