ராட்சத அலையில் சிக்கி எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் நடுத்தரவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கௌசிகன். இவர் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கல்லார் பகுதியில் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது ராட்சத அலை வந்து மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் இரண்டு சிறுவர்களை மீட்டார்கள். ஆனால் கௌசிகனை மீட்க முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌசிகனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கௌசிகனின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.