கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் இருக்கின்ற ஆற்றில் ஆழம் பார்க்கச் சென்ற நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் ரெட்டியார் பாளையம் என்ற பகுதியில் நடராஜன் என்பவரின் மகன் கௌதம் (41) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 7 நபர்களுடன் இரண்டு கார்கள் மூலமாக, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே இருக்கின்ற சோரப்பட்டு மலை கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் சிறுகலூர் என்ற நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு இரவு 9 மணிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது கௌதம் காரில் இருந்து இறங்கி ஆற்றின் ஆழத்தை தெரிந்துகொள்வதற்காக ஓடும் ஆற்றில் இறங்கியுள்ளார்.
கல்வராயன் மலையில் சென்ற இரண்டு நாட்களாகவே தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் ஆறு, ஓடை மற்றும் நீர்வீழ்ச்சிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் கௌதம் இறங்கியதால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளார். அதனைக் கண்ட அவரின் நண்பர்கள் அனைவரும் அவரை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் காப்பாற்ற முடியாத நிலையில், சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கரியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்தநிலையில் சிறுகலூர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கௌதமின் உடல் கூடலூர் ஆற்றின் ஓரத்தில் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் கௌதமின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.