கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் (24)என்பவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார்.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பிரியாணி சாப்பிட்டதால் தான் அவர் உயிரிழந்தாரா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.