நண்பர்களை கல்லால் தாக்கி செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் ஜவுளி கடை ஊழியரான முகமது சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஷ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாழைக்காய் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமதின் மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்தனர்.
அதன்பிறகு அந்த மர்ம நபர்கள் நண்பர்கள் இருவரையும் கல்லால் தாக்கி செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடியான யாசர் மற்றும் 3 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.