இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உதயகுமார் கொலை வழக்கில் தொடர்புடைய சுரேஷ், அருண்குமார், சிவம், பாலகுமார், வெள்ளிமலை மற்றும் சோலை ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.