திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதிய முடிமலை, அழகர் மலை, கரந்தமலை ஆகிய மலை குன்றுகளின் நடுவே அமைந்துள்ளது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள நத்தம் தொகுதியில் மா மற்றும் புளி விளைச்சல் அதிகமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்து சுற்றுலா தலமாக உருவெடுத்து வரும் சிறுமலை, திருமலைக்கேணி முருகன் கோவில் போன்றவை இப்பகுதியின் முக்கிய இடங்கள்.
நத்தம் தொகுதியில் 1977 முதல் 1991 ஆண்டு வரை காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டி அம்பலம் தொடர்ந்து 6 முறை வென்றுள்ளார். 1999ஆம் ஆண்டு அவர் மறைந்த பின்னர் இடைத்தேர்தல் தொடங்கி 2011 தேர்தல் வரை அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 2016 இல் நடைபெற்ற தேர்தலில் மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டி அம்பலம் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
அதிக பெண் வாக்காளர்களை கொண்ட நத்தம் தொகுதியில் மொத்த 2,82, 616 வாக்காளர்கள் உள்ளனர். நத்தம் தொகுதியில் பள்ளிக்கல்வி முடிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க திண்டுக்கல் அல்லது மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பெண்கள் கல்லூரிக்கு சென்று படிப்பது சிரமம் உள்ளதால் நத்தத்தில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
நத்தம் பகுதியில் விளைவிக்கப்படும் மா மற்றும் புளியை பதப்படுத்துவதற்கான குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தல் ஆகும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதும், போதுமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கை. கோணபட்டியில் தடுப்பணை கட்ட மறைந்த கக்கன் அமைச்சராக இருந்த காலத்தில் பூஜை போடப்பட்டு இன்றுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது.
திருப்பூருக்கு அடுத்தபடியாக ஆயத்த ஆடைகள் எனப்படும் ரெடிமேட் உடைகள் அதிகளவில் குடிசைத்தொழில் போல இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே ஆயத்த ஆடைக்கான தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் விருப்பமாக உள்ளது. சிறுமலை, திருமலைக்கேணி முருகன் கோவில் ஆகியவற்றை சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். சாலை போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.