திராவிட கட்சிகளின் உதவியால் பணக்காரர்களாக வாழ்ந்துகொண்டு ஓட்டுகளை மட்டும் பாஜகவுக்கு போட்டு இருக்கிறீர்கள் என சென்னையில் வாழும் வட இந்தியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு புட்டு வைத்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் வடசென்னையை சேர்ந்த சேகர்பாபு. துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை எதிர்த்து பாஜகவின் வினோஜ் செல்வம் போட்டியிட்டார். வாக்குப்பதிவு அன்று தொகுதிக்கு தொடர்பில்லாத வட இந்தியர்கள் பலர் துறைமுகம் தொகுதியில் ஓட்டு போட சென்றபோது அங்கிருந்த திமுகவினர் அவர்களை விரட்டி விட்டனர். சிலர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சென்னை சவுகார்பேட்டை வட இந்தியர்களின் வாழிடமாக உள்ளது. திராவிட கட்சிகளை இந்தியில் பரப்புரை செய்யும் அளவுக்கு சவுகார்பேட்டை முழுவதும் வட இந்தியர்கள் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் திமுக வேட்பாளர் சேகர்பாபுவை விட முன்னிலை பெற்று அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். சென்னை திமுகவின் கோட்டை என்று கருதப்படும் நிலையில் சேகர்பாபு பின் வாங்குவது எப்படி என எல்லோரும் வாயடைத்துப் போயினர். முடிவில் சேகர்பாபு 59,317 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வினோஜ் செல்வம் 32,043 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இந்த நிலையில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வட இந்திய மக்கள் அமைப்புடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சேகர்பாபு சில கருத்துக்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அவர் பேசும்போது இங்கு வசிக்கும் வட இந்திய மக்கள் வசதி வாய்ப்புகளுடன் செல்வந்தர்களாக மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன்.
ஆனால் இந்த வசதி வாய்ப்பு பாஜகவால் உங்களுக்கு வரவில்லை. திராவிட கட்சிகளால் வந்தது. அப்படியிருக்க நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடாமல் பாஜகவுக்கு ஓட்டு போட்டு இருக்கிறீர்கள். எங்களுக்கு தான் ஓட்டு போட்டதாக கோரி ஏமாற்றுகிறீர்கள். முன்பு வாக்குச்சீட்டு முறை இருந்தது. இப்போது வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளது. எனவே நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்பதை அதுவே காண்பித்துவிடும். அதேநேரம் தவறு செய்பவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை அப்போதுதான் அவர்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள். நமக்கு யாராவது தீங்கு செய்தால் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது திருக்குறள் அப்போதுதான் அவர்கள் கூச்சத்தால் தங்களது தவறை உணர்வார்கள் என சேகர்பாபு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.