இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளதால் அதனை குறிப்பிடும் வகையில் 800 என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த நிலையில் முத்தையா முரளிதரன் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும். இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும். தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பிரபல இயக்குனர் திரு. பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் பார்த்திபன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான திரு. சீமான் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார்கள். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள முத்தையா முரளிதரன் தமிழகத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதியிடம் தான் கேட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.
முத்தையா முரளிதரனின் அறிக்கையை பதிவிட்டு நன்றி, வணக்கம் என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டார். இந்த பதிவு குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அர்த்தம் என குறிப்பிட்டார்.