மாமரங்களை பூச்சிகள் தாக்குவதால் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீலம், செந்தூரா, பீத்தர், பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா போன்ற பலவிதமான மாம்பழங்கள் 40 ஆயிரம் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமரங்களில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்கும். இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு பூக்கள் பூத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் தத்துப்பூச்சிகள் மாமரங்களை மிக மோசமான அளவில் தாக்கி சேதப்படுத்துகிறது.
இதனால் மாம்பழ சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பூச்சிகளை நிரந்தரமாக அழிப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவசாயிகளுக்கான இதுவரையில் அரசாங்கம் தர வேண்டிய நிவாரண தொகையை தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் மாம்பழத்தை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு மாம்பழ விவசாயிகளின் தலைவர் சவுந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.