தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது படங்களிலும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை தி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து தற்போது மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து மருத்துவமனைக்கு சென்று பாரதிராஜாவை பார்த்துள்ளார். அதன்பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் இயக்குனர் பாரதிராஜா நலமாக இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் நல்ல சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர் உடல் நலத்தைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரைப் பற்றி வதந்தி பரப்புவதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை. அவருடைய நுரையீரலில் சற்று நீர் சேர்ந்து இருக்கிறது. இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என மருத்துவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். அவரால் அடையாளம் காண முடிகிறது. அவர் நன்றாக பேசுகிறார். நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம். அவர் திரும்பி வந்து மீண்டும் கலை உலகை ஆழ்வார் என்று கூறினார்.