Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நம்பி ஏமார்ந்த கடை ஊழியர்…. நூதன முறையில் செல்போன், மோட்டார் சைக்கிள் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

நூதன முறையில் செல்போனை மற்றும் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரத்தில் பிரபல செல்போன் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் அழகாபுரம் காவல் நிலையம் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருவதாகவும், தனக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி செல்போன் நிறுவன விற்பனை பிரதிநிதியான கண்ணன் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனுடன் அந்த குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நான்தான் உங்களிடம் செல்போன் ஆர்டர் செய்தேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து உங்களது மோட்டார் சைக்கிளை கொடுத்தால் பக்கத்து தெருவில் வசிக்கும் எனது அண்ணனிடம் செல்போனை காண்பித்து விட்டு வருவேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பிய கண்ணன் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த வாலிபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை நூதன முறையில் திருடி சென்ற வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |