வேலை செய்யும் வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் . இவர் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்த நிலையில் இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 26 ந்தேதி சிவகங்கையில் ராஜசேகரின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பிறகு வீடு திரும்பிய அவர்கள் வழக்கமான வேலைகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ந்தேதி குடும்ப விசேஷங்களில் கலந்துகொள்வதற்காக தங்கநகைகளை அணிந்து செல்ல பீரோவை திறந்து நகையை தேடிய போது 55 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் வினிதா என்பவரும் திடீரென வேலைக்கு வராமல் இருந்ததும் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததும் வினிதா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வினிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் காட்டுவளவு என்னும் பகுதியில் பதுங்கி இருந்த வினிதாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் வினிதாவிடம் விசாரணை நடத்தியபோது கல்லூரி பேராசிரியரின் வீட்டில் இருந்த நகையை நான் தான் திருடினேன் என்று திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்த 43 சவரன் தங்க நகையை மீட்டெடுததோடு வினிதாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.