காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று இரவு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரை ஓட்டி வந்தது ஆதிநாராயணன் என்பதும், ஜின்னாவுக்கு சொந்தமான காரை அவர் திருடியதும் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து ஆதிநாராயணனை காவல்துறையினர் கைது செய்து காரை மீட்டனர்.