நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின் ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றி பிடித்து விட்டோம் என்ற இறுமாப்போடு ஆட்சியை கைப்பற்றி ஒரு ஓராண்டு நிறைவு பெறும் நாளில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என நம்ப வைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க-வின் திராவிட மாடல் அரசு. ஆட்சிக்கு வருவதற்காக அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது போல் நடித்த தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது என கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்கு செய்யும் துரோகம். அதனால் தங்களின் உழைப்புக்காக, வாழ்வாதார உரிமைக்காக 20 வருட காலமாக போராடி வரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையாகிய பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.