மனிதாபிமானம் உள்ள சிலர் இந்த மழைக்காலத்தில் நாய்களுக்கும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாறி கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. இந்நிலையில் மழை காரணமாக தங்கும் இடம் இல்லாமல் தெருவிலும், சாலையோரங்களிலும் இருந்த நாய்களுக்கு சென்னை வாசிகள் தங்கள் வீடுகளில் தங்க இடம் அளித்துள்ளனர். திருவேற்காட்டில் விக்னேஷ் குமார் என்பவர் தன் வீட்டில் அருகிலிருந்த 13 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்றிற்கு தங்க இடம் அளித்துள்ளார்.
அதேபோன்று ஆவடியில் வசிக்கும் யோகா லஷ்மி என்பவர் தன்னுடைய வீட்டில் மூன்று நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இது போன்ற பேரிடர் காலங்களில் விலங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
அவைகளும் நம்மை போன்று ஒரு உயிர் தானே. மரத்தின் அடியில் தங்குவதால் ஆபத்து நேரிடும். எனவே இந்த வாயில்லா ஜீவன்களை காப்பது நம்முடைய கடமை” என்று கூறியுள்ளனர். மேலும் எம்.மகேஷ் என்பவர் இது குறித்து கூறுகையில், “அவை தற்காலிகமாக தான் தங்குகின்றன, நிரந்தரமாக அல்ல. நிலைமை சரியானதும் அவைகள் தானாக சென்று விடும். எனவே மழைக்காலங்களில் விலங்குகளுக்கும் தங்க இடம் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.